சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற கொடூர சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்னாம்பள்ளியைச் சேர்ந்த சூர்யா என்ற மாணவி, கோரிமேடு அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உயிரியல் பாடப்பிரிவில் படித்து வருகிறார்.

இவர், ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன பிரியன் என்பவருடன் இன்ஸ்டாகிராம் வழியாக பழகி, காதலித்து வரும் நிலையில், இருவருக்கிடையே விரிசல் ஏற்பட்டு பிரிந்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை இருவரும் பழைய பேருந்து நிலையத்தில் சந்தித்து பேசினார்கள். ஆனால், உரையாடல் முற்றிலும் வாக்குவாதமாக மாறி, மோகன பிரியன் திடீரென கத்தி எடுத்து சூர்யாவை கழுத்து மற்றும் உடல் பல இடங்களில் குத்தியதோடு, பின்னர் தானும் தனது கை மற்றும் கழுத்தில் கத்தி கிழித்து தற்கொலைக்கு முயன்றார்.

அருகிலிருந்தவர்கள் நடுநடுவே தலையிட்டு இருவரையும் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.