திருச்சியில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் பேசினார். அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அண்ணன் என்னை கூப்பிட்டு கூட்டணி குறித்து நான் பேசிக் கொள்கிறேன். நீங்கள் பேட்டியெல்லாம் கொடுத்து கூட்டணியை கெடுத்து விடாதீர்கள் என்று என்னை அழைத்துக் கூறினார். அதற்கு நான் நாங்கள் ஏன் கூட்டணியை கெடுக்க போகிறோம். கூட்டணி வந்தால் நல்லது தானே என்று கூறினேன். அதற்கு அவர் நீங்கள் கோபத்தில் திட்டி விடுகிறீர்கள். பின்னர் அந்த கட்சியினர் என்னிடம் கோபித்துக் கொள்கிறார்கள். அதனால் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கையெடுத்து கும்பிடுகிறார். அதனால்தான் எனக்கு எதுக்கு வம்பு என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதில்லை.

பேட்டி கொடுத்தால் அப்புறம் எங்களையும் கட்சியை விட்டு நீக்கிவிடுவார். பின்னர் கூட்டணிக்கு வருகிறவன் சும்மாவா வருகிறான்.  20 சீட்டு கொடு, 100 கோடி பணம் கொடு என்று எதையோ நெல் மூட்டைகளை கேட்பது போன்று கேட்கிறான். கூட்டணி பற்றி பேசியவுடன் அவர்கள் பெட்டியை கொடுத்து விடுகிறார்கள். அங்கேயே சொல்லுங்கள் என்றால் இப்போது அங்கே செல்ல முடியாது. அதிமுகவில் சேர்ந்தால் தான் ஜெயிக்க முடியும் என்று கூறுகிறார்கள். அதன் பிறகு நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து 2026 தேர்தலில் வெற்றியை தேடி தர செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க 100 கோடி ரூபாய் பணம் கேட்பதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.