புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடி மலையில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், ஜல்லிக்கட்டு நடத்தும் விழா குழுவினர்களிடம் மாவட்ட நிர்வாகம் பிரமாண பத்திரம் கட்டாயத்தின் பெயரில் எழுதி வாங்குகிறார்கள். அதில் ஜல்லிக்கட்டில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் மாடுபிடி வீரர்களுக்கோ அல்லது காலை உரிமையாளர்களுக்கோ விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில் நபர் ஒருவருக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாயை விழா நடத்தும் கமிட்டி செலுத்த வேண்டும் என்று எழுதி வாங்கப்படுகின்றது.

இதனால் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இந்த முறை தமிழக அரசு இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் பதிவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. உள்ளூரில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆன்லைன் முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த ஆன்லைன் முறையை தமிழக அரசு நீக்கி தரும் என்ற நம்பிக்கையில் நாங்கள் உள்ளோம். எனவே ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசு ஆலோசித்து நல்ல முடிவை கூற வேண்டும் என்று ராஜசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.