முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, பெண் கல்வி, பெண் விடுதலை பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கு சமூக பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்திய ஜெயலலிதா பெண்களுக்காகவும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டுவந்த அற்புதமான திட்டங்களை எல்லாம் திமுக அரசு சீர்குலைத்து நிறுத்தி விட்டது.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெற்ற காலகட்டங்களில் காங்கிரஸ் திமுக கூட்டணியின் மத்திய அரசு நிதி நெருக்கடியை கொடுத்தும், மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டும் இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அண்ணாவின் மாநில சுயாட்சி கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு ஜெயலலிதா அரசை நிதி நெருக்கடிக்கு தள்ளி நிலைகுலைய செய்ய வேண்டும் என்ற கெடுமதியுடன் திமுக அங்கம் வகித்த மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டது.

இன்று திமுக அரசு இருமொழிக் கொள்கையை காப்பாற்ற கூட திறனற்றதாக உள்ளது. பெரிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களை கொண்டதாக இருந்தாலும் தமிழ்நாட்டில் உரிமைகளை காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாகவே உள்ளது. பொழுது விடிந்து, பொழுது போனால் தமிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலையில் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன என குற்றம் சாட்டியுள்ளார்.