உலகம் முழுவதும் மனித வாழ்வியல் முறையை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்படும் புதிய வகை மருந்துகள் எலிகளுக்கு தான் முதலில் கொடுக்கப்படும். ஏனெனில் எலியின் உடம்பில் மனித உயிர்களுக்கு ஏற்றார் போன்று உடற்கூறியல், உடலியல் மற்றும் மரபணுக்கள் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் மருந்துகளை முதலில் எலிகளுக்கு கொடுத்து சோதனை செய்கிறார்கள். இந்த சோதனையின் போது பல்லாயிரக்கணக்கான எலிகள் உயிரிழக்கிறது.

இந்நிலையில் ஆய்வில் உயிரிழக்கும் எலிகளை நினைவுகூறும் விதமாக ரஷ்ய நாட்டில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதாவது மனித உயிர்களை காக்க கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை முதலில் எலிகளுக்கு கொடுக்கிறார்கள். இப்படி மனிதர்களுக்காக பயன்படும் எலிகளை கௌரவிக்கும் விதமாக ரஷ்ய நாட்டில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நோவோசிபிர்ஸ்க் பகுதியில் உள்ள சைட்டாலஜி மற்றும் மரபியல் கல்வி நிறுவனத்தில் உள்ளது. இந்த எலி சிலை கண்ணில் கண்ணாடி அணிந்து கொண்டு கைகளில் ஊசியுடன் டிஎன்ஏவை பின்னுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு காரணங்களுக்காக சிலை வைக்கப்படும் நிலையில் இந்த எலியின் சிலை உலகம் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது.