
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கும், துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதை முன்னிட்டு நேற்று முன் தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் விருந்தில் மணமகள் வீட்டார் இனிப்பை தவிர்த்துள்ளனர். இதனால் சாப்பாடு பரிமாறும் நேரத்தில் மணமகன் வீட்டார் முதலில் இனிப்பை வைக்காமல் விட்டது தவறு என்றும், தங்கள் சம்பிரதாயத்தை அவர்கள் அவமதித்து விட்டதாகவும் கூறி தகராறில் ஈடுபட்டனர். திருமணம் விருந்தில் இனிப்பு வைக்காததால் பெரும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மணமகள் வீட்டாரும் தகராறில் ஈடுபட்டனர்.
விடிய விடிய தகராறு நடந்த நிலையில் ஒரு கட்டத்தில் மனுமகன் தாலி கட்ட தயாராக இருப்பதாக கூறினார். ஆனால் அதுவரை பொறுமையாக இருந்த மணப்பெண் ஒரு சிறிய விஷயத்துக்காக இப்பொழுதே இவ்வளவு பெரிய பிரச்சனை செய்கிறார்கள் என்றால் திருமணத்திற்கு பிறகு அவர்கள் வீட்டில் நான் நிம்மதியாக இருக்க முடியாது என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்டார். இதைத்தொடர்ந்து திருமண ஏற்பாடுகளுக்கு தாங்கள் நிறைய செலவு செய்திருப்பதால் மணமகன் வீட்டார் அந்த பணத்தை தங்களுக்கு திரும்பத் தர வேண்டும் எனக் கூறி மணமகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தியதில் மணமகன் வீட்டார் திருமண செலவுக்கான பணத்தை அவர்களிடம் கொடுத்தனர்.