ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் கருவறைக்கு முன்பாக இருக்கும் அர்த்த மண்டபத்திற்குள் நுழைய முயன்றார். ஆனால் அவரை கோவில் பூசாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய நிலையில் இது தொடர்பாக கோவில் நிர்வாகம் அளித்த விளக்கத்தில் அர்த்த மண்டபமும் கருவறை போன்றது தான். அதற்குள் நுழைவதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இளையராஜா தவறுதலாக அந்த மண்டபத்திற்குள் நுழைய முயன்றதால் அவரை கோவில் நிர்வாகம் தடுத்து நிறுத்தி விவரத்தை சொன்னது. அதைக் கேட்டதும் இளையராஜாவும் அங்கிருந்து வெளியே வந்து சாமி ‌ தரிசனம் செய்து விட்டு சென்றார் என்று கூறியுள்ளார்கள்.

இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இளையராஜா ஒரு இசை கடவுள். அவருக்கு கோவிலுக்கு செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அவரை கோவில் கருவறைக்குள் விட மறுத்தார்கள் என்ற சர்ச்சையை நான் வன்மையாக கண்டிப்பதோடு இதுபோன்று எத்தனை நாட்களுக்கு சர்ச்சையை கிளப்பி மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள். எந்த ஜாதியை சேர்ந்தவர்களும் கருவறைக்குள் செல்ல முடியாது. அது இளையராஜாவாக இருந்தாலும் சரி கஸ்தூரியாக இருந்தாலும் சரி அல்லது என்னுடன் இருக்கும் சக தோழர்களாக இருந்தாலும் சரி பிராமணர்களாக இருந்தாலும் சரி யாராலும் போக முடியாது.

கோவில் கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டும்தான் செல்ல முடியும் நிலையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அனைத்து ஜாதியினரும் கோவில் அர்ச்சகராக மாறலாம். அப்படியெனில் கோவில் அர்ச்சகர்கள் எந்த ஜாதினராக இருந்தாலும் சரி அவர்கள் கருவறைக்குள் செல்ல முடியும். இதை நான் கூறியதற்கு தான் திரித்து பேசினேன் என்று சொன்னார்கள். இளையராஜா கோவில் கருவறைக்குள் செல்ல முயற்சி செய்யவில்லை. மேலும் அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அந்த இடத்தில் நிற்குமாறு கூறினார்கள். அதேபோன்று அவரை நிற்க வைத்து மரியாதையும் செய்தார்கள் என்றார்.