
இந்தியாவில் ரேஷன் கார்டு என்பது ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கக் கூடியதாகும். ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. உணவுப் பொருள்கள் மட்டுமல்லாமல் நிதி உதவிகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கிறது. ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் அரசு தரப்பில் வழங்கப்படும் மானியம் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீப காலமாகவே போலி ரேஷன் கார்டுகள் பற்றிய வழக்குகள் அதிகமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அதனால் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டை இணைத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆன்லைனிலும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உங்களுடைய ரேஷன் கார்டை இன்னும் ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் ரேஷன் கார்டில் உள்ள அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்த முடியாமல் போகலாம். எனவே விரைவில் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது நல்லது. உங்களுடைய மொபைல் மூலமாகவே வீட்டிலிருந்தபடியே இந்த வேலையை முடித்து விடலாம்.
அதற்கு உங்கள் மாநிலத்தின் பொது விநியோக அமைப்பு இணையதளத்தில் உள் நுழைந்து ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில் தேவையான தகவல்களை பூர்த்தி செய்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP- ஐ பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு இணைப்பு செயல்முறை நிறைவடையும். இது தொடர்பாக உறுதிப்படுத்துதல் செய்தியும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதாருடன் ரேஷன் கார்டு இணைப்பது கட்டாயமாகும்.