கரூர் மாவட்டம் குப்பிரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினகிரி. இவரது மனைவி கார்த்திகை செல்வி. இந்த தம்பதியினருக்கு பிரியங்கா(27), பிரியதர்ஷினி(25), பிரித்திகா(23) என்ற மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பிரியங்கா கொல்லிமலை வனச்சரகத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரியங்கா வேலை வேண்டாம் என எழுதி கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பிரியங்காவுக்கு சமூக வலைத்தளம் மூலமாக பெங்களூரைச் சேர்ந்த கார்த்திக்(41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 11-ஆம் தேதி கார்த்திக் தனது மனைவி கிரீஷ்மாவுடன் காரில் பிரியங்கா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கார்த்திகை செல்வியிடம் நான் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறேன். உங்களது மூன்று மகள்களுக்கும் வேலை வாங்கி கொடுக்கிறேன் என கார்த்திக் கூறியுள்ளார். அதற்கு கார்த்திகை செல்வி சம்மதம் தெரிவிக்கவில்லை. உடனே கார்த்திக் உங்களது மூன்று மகள்களும் வேலைக்கு வருவதாக ஒத்துக் கொண்டனர். நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என கூறி ரத்தினக்கிரி, கார்த்திகை செல்வியை திட்டியதாக தெரிகிறது.

மேலும் அவர்களது மூன்று மகள்களையும் காரில் கடத்தி செல்ல முயன்றனர். இதுகுறித்து கார்த்திகை செல்வி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திக் மற்றும் அவரது மனைவி கிரீஷ்மாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற விசாரித்தனர். அப்போது கார்த்திக் ஆசிரியராக வேலை பார்க்கவில்லை என்பது தெரியவந்தது. கார்த்திக்கும், அவரது மனைவியும் இணைந்து காரில் மூன்று இளம் பெண்களையும் கடத்திச் செல்ல முயன்றது உறுதியானது. இதனால் கார்த்திக் மற்றும் அவரது மனைவியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்