
இந்தியாவில் தற்போது அதிக அளவிலான மக்கள் வீடுகளில் சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அரசு சார்பில் மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படுவதால் மக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். ஆனால் வீடுகளில் கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். வாயு கசிவுகள் மற்றும் ஷார்ட் சர்க்யூட் காரணமாக சில நேரங்களில் சிலிண்டர்கள் வெடித்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் விபத்துக்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே அதனை பயன்படுத்தும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சமையல் சிலிண்டரில் கேஸ் கசிந்து தீப்பிடித்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும். அதனால் சமையலின் போது கேஸ் கசிவதாக சந்தேகம் இருந்தால் உடனே அவசர உதவி எண் 1906 அல்லது கேஸ் சிலிண்டர் அலுவலக எண்ணுக்கு போன் செய்து புகார் அளிக்கலாம். பிரச்சனையின் தீவிரம் கருதி உடனே பிரதிநிதி அனுப்பி வைக்கப்படுவார். அவர் வந்து ஆய்வு செய்து சிலிண்டரை மாற்ற ஏற்பாடு செய்வார். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது.