
சேலம் மாவட்டத்தில் உள்ள மாமரத்து கொட்டாய் பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவஞானம்(54), செல்வராஜ்(45) தங்கதுரை(39), பூமிநாதன் என்ற நான்கு மகன்களும், சிவமாலா சிவசக்தி என்ற மகள்களும் இருந்துள்ளனர். இவர்களுக்கு ஆறு சென்ட் வீட்டு நிலமும் 40 சென்ட் விவசாய நிலமும் இருந்தது. சிவஞானத்திற்கு சுதா என்ற மனைவி உள்ளார். செல்வராஜுக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூமிநாதன் உயிரிழந்துவிட்டார். கடந்த ஒரு மாதமாக வீட்டுமனை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் செல்வராஜ் வீட்டில் முன் பகுதியில் கூரை அமைக்க முயன்றார். இது தொடர்பாக தகராறு ஏற்பட்டபோது செல்வராஜ் தனது அண்ணி சுதாவை தாக்க முயன்றார்.
இதனால் கோபமடைந்த சிவஞானம் தனது தம்பியை தடுத்துள்ளார். மேலும் அவரது மனைவி ரேவதியை கீழே தள்ளிவிட்டார். பின்னர் அருகே இருந்த தேங்காய் உரிக்கும் கம்பியால் செல்வராஜை குத்திவிட்டு, அவரது மனைவியையும் தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த ரேவதியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிவஞானம், அவரது மனைவி சுதா இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.