
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற கொடூரமான கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாயுடுபுரத்தைச் சேர்ந்த சிவராஜ் (60) என்பவர், பெரும்பள்ளம் பகுதியில் நண்பர்கள் காட்டேஜ் எனும் பெயரில் சுற்றுலா விடுதியை நடத்தி வந்தவர். இவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால், அவரது குடும்பத்தினர் மதுரை அழகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவரது சகோதரி சாந்தி அவரை மீண்டும் கொடைக்கானலுக்கு அழைத்துவர, சிவராஜ் வீட்டிற்கு செல்லாமல் தனது காட்டேஜிலேயே தங்கியிருந்தார்.
இந்த இடைவெளியில், மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற போது, மதுரை தத்தனேரியை சேர்ந்த மணிகண்டன் (25), அருண், ஜோசப், சந்தோஷ் மற்றும் நாகசரத் ஆகியோருடன் சிவராஜ் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். சிகிச்சைக்கு பின் வெளியே வந்த பிறகும் இந்த நண்பர்கள் அடிக்கடி சந்தித்து மது அருந்திவந்ததாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த மார்ச் 20ம் தேதி, காட்டேஜில் இவர்கள் அனைவரும் சேர்ந்து அதிக அளவில் மது அருந்திய நிலையில், சிறிது நேரத்தில் சிவராஜ் மற்றும் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஐந்து பேரும், முதலில் சிவராஜை தாக்கி, மதுபாட்டிலால் சரமாரியாக குத்தியுள்ளனர். படுகாயமடைந்த சிவராஜை அருகிலுள்ள கேம்பயர் பகுதியில் டீசல் ஊற்றி எரித்து கொன்றுள்ளனர். அதற்குப்பின், அவரது உடலை பாதி எரிந்த நிலையில் சுமார் 50 அடி பள்ளத்தில் வீசி வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சிவராஜ் மாயமானதாக அவரது சகோதரி கொடுத்த புகாரின் அடிப்படையில், கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், குற்றச்செயலில் ஈடுபட்ட மணிகண்டன் மீண்டும் சிகிச்சை பெற மறுவாழ்வு மையம் சென்றபோது, அங்கு நடந்ததை நிர்வாகியிடம் கூறியுள்ளார். உடனடியாக அந்த நிர்வாகி மதுரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு, கொடைக்கானல் போலீசாருக்கு ஒப்படைக்கப்பட்டார். மணிகண்டன் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார், சிவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தப்பியுள்ள நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களை கைது செய்த பிறகு தான், கொலையின் பின்னணியில் சொத்துத் தகராறு உள்ளதா அல்லது வேறு காரணமா என்பதற்கான உண்மை வெளிவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.