உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் சிவில் லைன்ஸ் பகுதியில் நடந்த கொலை சம்பவம் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் விமல் சோனியும், உடற்பயிற்சிக்காக அவரது ஜிம்மிற்கு வந்திருந்த ஏக்தா குப்தாவும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். ஏக்தாவின் கணவர் பங்கு சந்தை தரகராக உள்ளார். ஜூன் 24 ஆம் தேதி ஜிம்முக்கு சென்ற ஏக்தா மாயமான நிலையில், கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த கொலை, நான்கு மாதங்கள் கழித்து வெளிச்சத்திற்கு வந்தது. விமல் சோனி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த விமல், ஏக்தாவை தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட உடலை மாவட்ட ஆட்சியர் பங்களா வளாகத்தில் விமல் புதைத்துள்ளார்.  இதனால் போலீசாரின் கவனம் தப்பும் என அவர் எண்ணியுள்ளார். தன் செல்போனைக் கூட பயன்படுத்தாமல் திட்டமிட்டு செயல்பட்டுள்ளார். இந்த சம்பவம், திரையுலகப் பாபநாசம் படக்கதை போன்று அமைந்து காவல்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விமல் சோனியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.