
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி(90) . இவரது கணவர் சீனிவாசன் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் காயங்களுடன் வீட்டில் மர்மமான முறையில் சரஸ்வதி இறந்து கிடந்தார். அவரது காதில் அணிந்திருந்த கம்மல் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ்(21) என்பவர் நகைக்காக மூதாட்டியை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கொக்கராயன்பேட்டையை சேர்ந்த தாமோதரன் என்பவர் கோகுல்ராஜூக்கு உடந்தையாக இருந்துள்ளார். தாமோதரன், கோகுல்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 6 கிராம் தங்கநகையை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியது.