திருவண்ணாமலை மாவட்டம் இடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது மனைவி தமிழரசி. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இவர்களது மூத்த மகன் தாமோதரனுக்கு 25 வயது ஆகிறது. சுமார் 15 வருடங்கள் கழித்து 2014 ஆம் ஆண்டு தமிழரசி தனது இரண்டாவது மகனை பெற்றெடுத்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு மதியம் விளையாட சென்ற 2-வது மகன் லோகேஸ்வரன் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் குடும்பத்தினர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது வீட்டிற்கு பின்புறம் செட்டிங் டேங்க் கட்ட தோண்டப்பட்ட இரண்டு அடி தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் லோகேஸ்வரன் இறந்து கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே லட்சுமி நாராயணன் குடும்பத்தினருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் ரவி குடும்பத்தினருக்கும் இடையே மின் இணைப்பு கம்பி வீட்டின் மேல் செல்வது, நிலப்பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

எனவே பழிவாங்க அவர்கள் தான் லோகேஸ்வரனை கொலை செய்து விட்டதாக லட்சுமி நாராயணன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் எதிர்வீட்டைச் சேர்ந்த ரவி என்பவர் உன் பிள்ளையை நாங்கள்தான் கொலை செய்தோம். உன்னால் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது என கூறியதாக தெரிகிறது.

ரவிக்கு கிருஷ்ணன், எழிலரசி, சங்கர் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து லட்சுமி நாராயணன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த பாக்யராஜ் என்பவர் ரவி, சங்கர் ஆகியோருடன் அமர்ந்து உணவு அருந்தியுளார். அப்போது அவர்கள் சிறுவனை கொலை செய்தது பற்றி பேசியுள்ளனர். இதுகுறித்து பாக்கியராஜ் எழுத்துபூர்வமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட சிறுவனின் உடலை வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.