செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கஜபதி. இவரது மகள் தீர்த்த தர்ஷினி(18) தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு ஃபேஷன் டிசைனிங் படித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரிய நத்தம் நாகாத்தம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் ராகுலை(22) கீர்த்த தர்ஷினி காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த தர்ஷினியின் பெற்றோர் காதலை கைவிடுமாறு மகளிடம் கூறியுள்ளனர். மேலும் தர்ஷினிக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் ஏற்பாடுகளை செய்தனர்.

இதனால் தர்ஷினி வீட்டை விட்டு வெளியேறி மேல்மலையனூர் கோவிலில் வைத்து ராகுலை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு காதல் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு செங்கல்பட்டு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். அப்போது நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எங்களது பெற்றோரை அழைத்து பேசி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் கீர்த்த தர்ஷினியை ராகுலுடன் அனுப்பி வைத்தார்.