
குவைத் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இந்த விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இரண்டு தமிழர்கள் பலியானதாக நேற்று தகவல் வெளியான நிலையில் மேலும் ஒரு தமிழர் பலியாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியை சேர்ந்த கருப்பணன் ராமு, குவைத் தீ விபத்தில் மூச்சு திணறி உயிரிழந்தார். இந்த தகவல் இன்று வெளியான நிலையில் அவருடைய மறைவால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்ந்துள்ளது. ராமுவின் மகன் கூறுகையில், குவைத்தில் அப்பா 26 வருடமாக இருந்தார். விசா முடிந்து ஊருக்கு வரும் சமயத்தில் இப்படி ஆகிவிட்டது, அவர் உயிரை தான் காப்பாற்ற முடியவில்லை, உடலையாவது எங்களிடம் கொடுங்கள் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.