திருச்சி மாவட்டம் உறையூரில் முத்துக்குமார்- சரண்யா (42) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சரண்யாவின் செல்போனுக்கு கடந்த 18ஆம் தேதி ஒரு whatsapp கால் வந்தது. அப்போது ஒரு பெண் பேசினார். அந்த பெண் தன்னுடைய பெயர் ரம்யா கிருஷ்ணா என்றும் தான் ஆஸ்திரேலியாவில் ஒரு கம்பெனி வைத்து நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். அந்த பெண் தங்களுடைய கம்பெனியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பி அந்தப் பெண் முதலில் 10,500 ரூபாயை முதலீடு செய்த நிலையில் ஒரு மணி நேரத்தில் வட்டியோடு சேர்த்து 14,000 ரூபாய் வந்துள்ளது.

அதன் பிறகு அவர் சிறிது சிறிதாக ரூ.1,4,300-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் அந்தத் தொகை திரும்ப கிடைக்காததால் சரண்யா அந்த பெண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்தப் பெண் ரூ.2,95,000 முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பி சரண்யாவும் அவர் சொன்ன வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு சொன்னபடி பணம் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரண்யா திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.