
கோவையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் சமூக வலைதளம் மூலம் பணத்தை இழந்த சம்பவம் தொடர்பாக, கோவை சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தீவிர நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்துள்ளனர்.
ராமசாமி, ஒரு சமூக வலைதள பதிவின் மூலம் ரூ 9,00,000 முதலீடு செய்துள்ளார். பின்னர், அவரது கணக்கில் 32 லட்சம் ரூபாய் இருப்பதாக காண்பித்து, அதுதான் தனக்கான லாபம் என நினைத்து பணத்தை எடுக்க முயன்றபோது மேலும் பணம் கேட்டுள்ளனர். இதனால் ஏமாற்றப்பட்ட ராமசாமி, சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி கும்பல் ராஜஸ்தானில் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ராஜஸ்தான் சென்று கிஷன் சௌத்ரி, சுனில் சரண், சந்தீப் குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். விசாரணையில், கைதானவர்களின் வங்கிக் கணக்கில் 3 கோடி ரூபாய்க்கும் மேல் பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்ததால், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.