
பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால், நூற்றுக்கணக்கான பங்களாதேஷ் மக்கள் இந்தியா-பங்களாதேஷ் எல்லையை அடைந்து தஞ்சம் புக முயன்றனர். ஆனால், இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அவர்களின் முயற்சியை தோற்கடித்தது.
மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியில் உள்ள மணிக்கஞ்ச் எல்லையில் 500-க்கும் அதிகமான பங்களாதேஷ் நாட்டவர்கள் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த பிஎஸ்எஃப் துப்பாக்கிச் சூடும் நடத்தியது.
முள்வேலி இல்லாததால், சிலந்தா கிராமத்தில் உள்ள ஜீரோ பாயிண்ட்டை பங்களாதேஷ் மக்கள் கடக்க முயன்றனர். எல்லையைக் கடப்பதற்கு முன்பே பிஎஸ்எஃப் சுமார் 600 முதல் 1000 பேரை தடுத்து நிறுத்தியது. மேலும், கிராமவாசிகளை எச்சரித்து, உள்ளே விடாமல் தடுத்தனர்.
பங்களாதேஷில் இடைக்கால அரசு பொறுப்பேற்கவிருந்த நிலையில், தங்களின் உயிருக்குப் பயந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்றதாக அந்தக் கூட்டம் தெரிவித்தது. ஆனால், பிஎஸ்எஃப் அனுமதி மறுத்தது.
மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகியதைத் தொடர்ந்து, பங்களாதேஷில் அரசியல் நிலைமை தலைகீழாகியுள்ளது. இதனால், பிஎஸ்எஃப் எச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறது.
தினமும் நடைபெறும் போராட்டங்களால் பதவி விலகிய ஷேக் ஹசினாவுக்கு பதிலாக இடைக்கால அரசை அமைக்கப்போவதாக பங்களாதேஷ் ராணுவம் தெரிவித்தது. அதன்படி, பாராளுமன்றத்தை கலைத்த அதிபர் முகமது ஷாபுதீன், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரும், ஷேக் ஹசினாவின் கடுமையான விமர்சகருமான முகமது யூனுஸை இடைக்கால பிரதமராக நியமித்தார். அவர் நேற்று பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.