விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தளவாய் கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலத்தின் மகன் பரணி (வயது 19), கடந்த சில நாட்களாக ஸ்டாலின் நகரில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கி, அருகே உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை இயற்கை உபாதைக்காக பரணி விழுப்புரம்–திருக்கோவிலூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் தண்டவாளம் அருகே அமர்ந்து ஹெட்போனில் பாடல் கேட்டு கொண்டிருந்தார். அந்த நேரத்தில், காலை 8.15 மணியளவில் காட்பாடி இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் அருகே வந்தபோது, ஓட்டுநர் சத்தமாக ஒலி எழுப்பியாலும் பரணி அதைக் கேட்கவில்லை. காரணம், அவர் ஹெட்போனுடன் இருந்ததால்தான் எனக் கூறப்படுகிறது.

இதனால் ரயில் மோதி பரணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பரணியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செல்போன் மற்றும் ஹெட்போன் பயன்படுத்தும் பொழுது விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.