விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் எம்ஜிஆர் நகரில் கண்ணகி காலனி பகுதி உள்ளது. இந்த பகுதியில் சப்பானி முத்தையா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகாசி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தன்னுடைய தேவைக்காக பலரிடம் கடன் வாங்கிய நிலையில் அதற்கான வட்டி பணத்தை செலுத்தி வந்துள்ளார். ஆனால் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவரால் வட்டி பணத்தை சரிவர கட்ட முடியவில்லை. இதனால் அவருடைய தாயார் பெருமாள் அம்மாளிடம் வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்‌. அவர் வேலைக்கு சென்று வட்டி பணத்தை செலுத்துமாறு கூறிய நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த முத்தையா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக திருத்தங்கல் காவல் நிலையத்தில் பெருமாள் அம்மாள் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் இறப்பதற்கு முன்பாக அழுதபடி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய இறப்புக்கு யாரும் காரணம் கிடையாது. எனக்கு வாழ வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் கடன் பிரச்சனையால் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.