
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்ட நிர்வாகம், 72 வயதான ரஸியா சுல்தானாவுக்கு, வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்தியாவை விட்டு பாகிஸ்தான் நாடு செல்லுமாறு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் குடிமக்களை கண்டறிந்து நாடு கடத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய உத்தரவின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகக் கூறப்படுகிறது.
ரஸியா சுல்தானா மற்றும் அவரது குடும்பத்தினர், இது ஒரு பெரிய தவறு எனக் குற்றச்சாட்டு வைக்கின்றனர். “நான் இங்கே பிறந்தேன், இது என் மண்ணு. நான் இங்குதான் வாழ்ந்து இங்கேதான் இறக்கப்போகிறேன்,” என்று தனது அடையாள ஆவணங்களை கையில் பிடித்துக்கொண்டு கண்ணீருடன் கூறினார் ரஸியா. பாதிக்கப்பட்ட ரஸியா தற்போது சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல உடல் நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நோட்டீஸ் வந்த பிறகு, அவர் உடல் நலம் மேலும் மோசமடைந்து, கடந்த 24 மணி நேரமாகச் சரியாக உணவு கூட எடுத்துக்கொள்ளவில்லை என்று அவரது குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.
ரஸியாவின் தந்தை ஹைதர் அலி, பீகார் மற்றும் கொல்கத்தாவில் வாழ்ந்தவர். அவருடைய திருமணம் ஒடிசாவின் சோரோ பகுதியிலுள்ள காஜிமஹல்லாவில் நடைபெற்றது. ஹைதரின் மூன்று மகள்களில் நடுப்பிள்ளையான ரஸியா, 1953ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர். பின்னர் சோரோ பகுதியில் உள்ள பாதான் மஹல்லாவின் ஸ்க் சம்சுதீனுடன் அவர் திருமணமானார். தற்போது அவரது கணவர் உயிரிழந்த நிலையில், ரஸியா தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
அதன்பின் ஹைதர் அலி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்குப் போய் குடியுரிமை பெற்றதாக தகவல்கள் உள்ளன. இருப்பினும், ரஸியா எப்போதும் இந்தியாவில்தான் வாழ்ந்துள்ளார் என்றும், பாகிஸ்தானுக்கோ பங்களாதேஷுக்கோ ஒருபோதும் சென்றதில்லையென்றும் அவரது மகள் சல்மா பர்வின் தெரிவித்தார்.
ரஸியா சுல்தானாவிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு மற்றும் வீட்டு நிவாரண சான்றிதழ் ஆகிய அனைத்தும் உள்ளதாகவும், பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை என்றும் குடும்பத்தினர் வலியுறுத்தினர். “அவரிடம் பாகிஸ்தான் செல்லும் விசா கூட கிடையாது. அவரை பாகிஸ்தான் செல்ல சொல்லுவது எப்படி நியாயமானது?” என்று சல்மா பர்வின் கேள்வியெழுப்பினார். நோட்டீஸ் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோதும் அவர்கள் பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது, குடும்பத்தினர் நோட்டீஸை திரும்ப பெறுமாறு நிர்வாகத்திடம் கடிதம் மூலமாக மனு அளித்துள்ளனர்.