
கர்நாடகா மாநிலத்தில் பவ்யா(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் ராமாச்சாரிக்கும், பவ்யாக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் தெரிந்த பவ்யாவின் பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் பவ்யா ராமாச்சாரியுடன் பேசுவதை நிறுத்தியதோடு, அந்த நிறுவனத்தில் இருந்தும் விலகியுள்ளார். இதனால் கடந்த 27ஆம் தேதி ராமாச்சாரி பவ்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு அவரது பெற்றோர் முன் ராமாச்சாரி பவ்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின் ராமாச்சாரி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பவ்யாவை குத்தினார். இதையடுத்து உடனடியாக அவரது பெற்றோர் பவ்யாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ராமாச்சாரியும் கத்தியால் அவரது கையை அறுத்து கொண்டார். அவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பவ்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி விரைந்து வந்த காவல்துறையினர் ராமாச்சரியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ராமாச்சாரி குணமானதும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.