
மகாராஷ்டிர மாநில சாலை போக்குவரத்துக் கழகம் (MSRTC) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கடும் நடவடிக்கையை எடுத்துள்ளது. மும்பை–புனே இடையிலான ஈ-சிவ்நேரி பஸ்ஸை ஓட்டிய டிரைவர் ஒருவர், வாகனம் ஓட்டும் போதே தனது மொபைல் போனில் கிரிக்கெட் போட்டி பார்த்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் லோனாவலா அருகே நடைபெற்றது. ஒரு பயணி இந்தக் காட்சியை வீடியோவாக பதிவு செய்து, மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரதாப் சர்நாய்க்கு அனுப்பியதையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும், மக்கள் தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அமைச்சர் சர்நாய்க் உடனடியாக MSRTC உயர் அதிகாரிகளை அழைத்து, டிரைவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டதுடன், அந்த பஸ்ஸை இயக்கிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பை புறக்கணிக்கும் இந்த செயல், அரசின் கவனத்திற்கு வந்ததும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து துறையின் விதிமுறைகளை மீறும் செயல்களில் ஈடுபடும் டிரைவர்களுக்கெதிராக புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அமல்படுத்தப்படும் என கூறப்பட்டது.