மெக்ஸிகோவின் டுராங்கோ நகரில் உள்ள கால்நடை மருத்துவமனையில், ஒரு நாயின் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட விவாதம், கடும் தாக்குதலாக மாறியது. மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எம்மானுவல் நாவாவின் கூற்றுப்படி, காய்ச்சல் மற்றும் சுவாசக் குறைபாடுடன் ஒரு நாயை சிகிச்சைக்காக ஒரு பெண் கொண்டு வந்திருந்தார்.

சிறந்த முறையில் மருத்துவம் அளிக்கப்பட்டும், அந்த நாய் உயிரிழந்தது. இந்த நிலைமை காரணமாக, நாயின் உரிமையாளர் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், அந்த மருத்துவமனையில் பணியாற்றும் பெண் கால்நடை மருத்துவரின் முடியை இழுத்து தாக்கினார்.

இந்தக் காட்சிகள் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில், பெண் மருத்துவர் தாக்கப்படும் தருணத்தில், அருகில் இருந்த ஆண் ஊழியர்கள் விரைந்து சென்று அவரை காப்பாற்றும் காட்சிகளும் தெளிவாக காணப்படுகின்றன.

இந்த வீடியோவை கண்ட பொதுமக்கள் மிகுந்த ஆவேசத்துடன் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். “இது போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என டாக்டர் நாவா கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவத்துக்கு உத்தியோகபூர்வமான விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை எனவும், உள்ளாட்சி போலீசார் இதுவரை எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.