
மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அலங்காநல்லூர் சரந்தாங்கி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரேவதி என்பவர் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
ரேவதி மீது கவிதா காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். புகாரில் ரேவதி என்பவரை எனக்கு 2009-ஆம் ஆண்டு முதல் தெரியும். அவர் என்னுடன் நன்றாக பேசுவார். ஒருநாள் அவர் என்னிடம் பேசும் போது நானும் என்னுடைய கணவரும் சிட்பண்ட் நடத்துவதாக கூறினார்.
அதில் சேமிப்பு சீட்டு திட்டத்தில் தவணை முறையில் பணம் செலுத்தினால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார். அவர் கூறியதை நம்பி கடந்த 2017-ஆம் ஆண்டு 1 லட்சம் ரூபாய்க்கு 2 சீட்டும், 2021-ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய்க்கு 2 சீட்டும், 3. 50 லட்சத்திற்கு ஒரு சீட்டும் கட்டினேன். மொத்தமாக 15.50 லட்சம் செலுத்தியுள்ளேன்.
மாதந்தோறும் தவணை முறையில் மொத்த பணத்தையும் 2022 ஆம் ஆண்டிலே செலுத்தி விட்டேன். ஆனால் ரேவதி இதுவரை பணம் தரவில்லை. அவரிடம் கேட்டபோதும் தகாத வார்த்தைகளால் பேசி கொன்று விடுவதாக மிரட்டினார்.
இவரைப் பற்றி விசாரித்த போது என்னை மட்டுமல்லாமல் பல ஆசிரியர்களை ஏமாற்றி பண மோசடி செய்தது தெரிந்தது. எனவே ரேவதி, அவரது கணவர் சத்யமூர்த்தி, அவர்களது மகள்கள் மற்றும் மருமகன்கள் என அனைவரின் மீதும் நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார்.