
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் அமைச்சர் துரை முருகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கட்சிக்காரர்கள் ஒருவரையும் நான் காட்பாடி தொகுதியில் கண்காணித்து வருகிறேன். போன தேர்தலில் கொஞ்சம் அசந்து விட்டேன். ஆனால் இந்த முறை ஏமாற மாட்டேன். கண்ணில் விரலை விட்டு ஆட்டி விடுவேன். சிலர் துரோகங்கள் செய்து விட்டார்கள். அது எனக்கு நன்றாக தெரியும்.
அந்த துரோகிகளை களையெடுத்து விட்டு எனக்கு தேர்தலை சந்திக்க தெரியும். நான் யாரை வேண்டுமானாலும் மன்னிப்பேன். ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மட்டும் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். என்னை கொலை செய்ய வந்தால் கூட நான் கண்டிப்பாக மன்னித்து விடுவேன். ஆனால் கட்சிக்கு துரோகம் செய்தால் ஒருபோதும் மன்னிப்பே கிடையாது. நான் இருக்கும் இந்த இயக்கத்தை 60 ஆண்டுகளாக கட்டி காத்து வரும் நிலையில் இந்த கட்சிக்கு துரோகம் செய்தால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. மேலும் அமைச்சர் துரைமுருகன் சொன்ன விஷயம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.