
மனிதர்கள் பல நூற்றாண்டுகளாகவே எதிர்பார்த்து வந்த “பூமிக்கு வெளியே உயிர்கள் இருக்கிறதா?” என்ற கேள்விக்கு சாத்தியமான பதிலை கண்டுபிடித்திருக்கிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த கேம்பிரிட்ஜ் பேராசிரியர் நிக்கு மதுசூதன்.
120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள K2-18b என்ற எக்ஸோபிளானட் கிரகத்தில், பூமியில் உயிரினங்கள் மூலம் உருவாகக்கூடிய DMS மற்றும் DMDS போன்ற மூலக்கூறுகள் இருப்பதாக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர்.
K2-18b கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன், கார்பன் டைஆக்ஸைடு மற்றும் நீராவி இருப்பது 2023ல் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது டைமெத்தில் சல்ஃபைடு (DMS) மற்றும் டைமெத்தில் டைசல்ஃபைடு (DMDS) ஆகியவை தெளிவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை பூமியில் கடல் பாசிகள் போன்ற உயிரினங்கள் மூலம் மட்டுமே உருவாகும் மூலக்கூறுகள் என்பதால், இந்த கிரகத்தில் உயிர் இருப்பதற்கான முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.
இந்த பரிசோதனைக்கு தலைமை வகித்த டாக்டர் நிக்கு மதுசூதன், ஐஐடி-பி.எச்.யூவில் படித்து, MIT-யில் உயர்படிப்பு முடித்து, தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளவர்.
“Hycean Planets” எனும் ஹைட்ரஜன் வளிமண்டலமும், பெரிய கடலும் கொண்ட கிரகங்களின் யோசனையை உலகுக்கு அறிமுகப்படுத்திய இவர், தற்போது K2-18b-யில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞான உலகிற்கு சமர்ப்பித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இது, விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாகும்.