
கோவை மாவட்டம் காட்டூரில் உள்ள பகுதியில் ராஜன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கதிர்நாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார். இதனால் ராஜன் வாரத்துக்கு ஒருமுறை மனைவியின் வீட்டுக்கு சென்று பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் அவர் வீட்டை பூட்டிவிட்டு மனைவியை பார்க்க சென்றார். அதன் பின் ராஜன் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜன் தன் நண்பனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார். அங்கு வீட்டின் நடுவே ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததை பாத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி விரைந்து வந்த காவல்துறையினர் ராஜன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்பியதோடு, அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பாலசுப்ரமணியன் (48) என்பது தெரிய வந்தது. இவர் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர். இவர் ராஜன் வீட்டில் திருட முயன்றுள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்த அவர் போதையில் இருந்ததால் எழ முடியாமல் அங்கு படுத்து தூங்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் காவல்துறையினர் பாலசுப்ரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.