
கோயம்புத்தூர் மாவட்டம் தோம்பிலிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக மத்துவராயபுரம் விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது விஏஓ வெற்றிவேல் என்பவர் வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு 3500 லஞ்சம் கேட்டுள்ளார். அப்போது கிருஷ்ணசாமி ஆவணங்கள் சரியாக இருக்கும் போது எதற்கு பணம் கொடுக்க வேண்டும் என வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு வெற்றிவேல் பணம் கொடுக்காமல் நீ எப்படி சர்டிபிகேட் வாங்குவது என்று பார்க்கிறேன் என கூறியுள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணசாமி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். சம்பவம் நடந்த அன்று கிருஷ்ணசாமி வெற்றிவேலை தொடர்பு கொண்டு பணம் ரெடியாக உள்ளது. போரூர் அருகே வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனை நம்பி வெற்றிவேலும் அங்கு சென்றார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிருஷ்ணசாமி வெற்றிவேலிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வெற்றிவேலை பிடிக்க முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வெற்றிவேல் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றார். சிறிது தூரத்தில் போரூர் பெரிய குளத்திற்குள் பணத்தை வீசிவிட்டார். அவரை துரத்தி வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வெற்றிவேலை பிடித்தனர். ரசாயனம் தடவி கொடுத்த பணத்தையும் மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வெற்றிவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.