
நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 18-ஆம் தேதி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய ஜாகீர் உசேன் மீது, மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதால் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், முகமது தவ்பிக், அவரது மனைவி நூர்நிஷா, சகோதரர் கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த முகமது தவ்பிக்கை தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
இந்த நிலையில் கொலைக்குழுவிற்கு தகவல் வழங்கியதாக, அந்த பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பவ நாளன்று, பள்ளிவாசலில் இருந்த ஜாகீர் உசேன் வெளியேறும் நேரத்தை, அந்த மாணவன் செல்போனில் கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, மாணவனை போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இந்நிலையில், ஜாகீர் உசேனின் மகன் இஜூர் ரஹ்மான், சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு, தனது தந்தையின் கொலை வழக்கில் சில காவல் அதிகாரிகள் குற்றவாளிகளை பாதுகாக்க முயல்கிறார்கள் என்றும், தனது உயிருக்கும் ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நெல்லை காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஜாகீர் உசேனின் வீட்டிற்கு துப்பாக்கியுடன் கூடிய இரண்டு போலீசாரை 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க பணியமர்த்தியுள்ளார். மேலும், முன்னாள் காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது பிசிஆர் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இஜூர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.