சென்னை மாவட்டம் கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் அருண் என்பவர் வசித்து வந்தார். இவர் பூக்கடை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அருணுக்கு அஸ்விதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அஸ்விதா கர்ப்பமாக உள்ளார். கடந்த மாதம் அருண் தனது மனைவியை தனது மாமியார் வீட்டில் விட்டு வந்தார். இந்த நிலையில் குடும்பத்தினர் மற்றும் மனைவியுடன் செல்போனில் பேசி வந்த அருணுக்கு ஏதோ மன உளைச்சல் இருந்ததாக தெரிகிறது. இது பற்றி அஸ்விதாவும் தனது கணவரிடம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் அருண் எதுவும் கூறவில்லை.

நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அருண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் போலீஸ்காரர் ஒருவர் கொடுத்த தொந்தரவால் அருண் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அருண் தனது சகோதரருக்கு செல்போனில் ஒரு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அந்த குறுந்தகவலில் என் குடும்பத்தை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.