திருவாரூர் மாவட்டம் மருதவனம் பகுதியில் பாபு (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புழுதிக்குடியில் உள்ள மதுபான கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு களப்பால் கிராமத்தில் அமைந்துள்ள மதுபான கடையிலும் கூடுதல் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக வேலைக்கு செல்லாமல் பாபு மிகுந்த மன வேதனையில் வீட்டில் இருந்துள்ளார்.

இவர் சம்பவ நாளில் குடும்பத்தினரிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு வீட்டில் பின்புறம் தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவருடைய மனைவி கதறி அழுதார். இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாபு எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது. அதில் தன்னுடைய சாவுக்கு மதுபான கடையின் மேலாளர் மற்றும் களப்பால் மதுபான கடையில் பணி புரியும் 3 ஊழியர்கள் தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.