
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போளிகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி, 1987ஆம் ஆண்டு தனது மனைவியான அருக்காணி மற்றும் இரட்டை குழந்தைகளை குடும்பத் தகராறினால் கொலை செய்து விட்டு தலைமறைவானார்.
இந்த கொலை சம்பவம் நெகமம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. அருக்காணி மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டனர்.
அருக்காணி கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கத் தாலி மற்றும் ₹10 நோட்டு, விசாரணையின் ஒரு பகுதியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது பொள்ளாச்சி ஜூனியர் மகிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
தற்போது, பல ஆண்டுகள் கழித்து தலைமறைவான முத்துசாமி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜே.எம்.2 நீதிபதி பிரகாசம், இந்த நகையும் பணமும் உரியவரான அருக்காணியின் உறவினரிடம் ஒப்படைக்க நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து, அருக்காணியின் அக்காள் முத்தம்மாளை போலீசார் அடையாளம் காண்பித்து, நீதிமன்றத்தில் அழைத்து வந்தனர். பிறகு, காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவுப்படி முத்தம்மாளிடம் ஒரு பவுன் தங்கத் தாலி மற்றும் பழைய ₹10 நோட்டினை முறையாக ஒப்படைத்தனர்.
“பல ஆண்டுகளுக்குப் பிறகு என் தங்கையின் நினைவுகளைத் திரும்ப பெற்றது போல் இருக்கிறது,” என உருக்கமாக தெரிவித்த முத்தம்மாள், நீதிமன்றத்திற்கும் போலீசாருக்கும் நன்றி தெரிவித்தார்.