
திருவட்டாறு அருகே ஆனூர்விளை பகுதியில் பிரதாப் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி எப்தலிஸ் டயானா. பிரதாப் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டுக்கு சென்று அங்கு வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 2020 ஆம் ஆண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதாப் சிங் உயிரிழந்தார். டயானா தனது 11 மற்றும் 13 வயது மகன்களை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த திருவட்டாறு உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமலை குமார் குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் வித்யாஸ்ரீ உள்ளிட்ட அதிகாரிகள் டயானா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது டயானா தனது குழந்தைகளை வெளிநாட்டில் தான் படிக்க வைப்பேன் எனக்கூறி பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டாராம். இதுகுறித்து மாவட்ட திட்ட குழு உறுப்பினரான சிவன் கூறியதாவது, தனது கணவரின் சிகிச்சைக்காக டயானா குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக மகன்களை பள்ளிக்கு அனுப்பவில்லை. இது தொடர்பாக பலமுறை பேசியும் அவர் அதற்கு உடன்படவே இல்லை. குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்