
கோயம்புத்தூர் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டியில், குழந்தையை திட்டிய கட்டடத் தொழிலாளியை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியைச் சேர்ந்த மணிகண்டன், தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது மகனும், மகளும் பாப்பம்பட்டியில் மனைவியுடன் வசித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு முன் குழந்தைகளை பார்க்க வந்தார்.
அப்போது மனைவியின் வீட்டின் அருகே ‘கேம்ப் ஃபையர்’ என்ற பெயரில் அக்கம் பக்க கட்டட பணிக்காக வைத்திருந்த மரக்கட்டைகளை எடுத்துள்ளார். இதைக் கண்ட கட்டடத் தொழிலாளி சிக்கந்தர் என்கிற ஆறுமுகம் (34) அவரை தட்டிக் கேட்டதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மரக்கட்டைகளை எடுத்த மணிகண்டனின் மகளை ஆறுமுகம் திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், கிரிக்கெட் மட்டையால் ஆறுமுகத்தை தாக்கியுள்ளார். இதற்குப் பிறகு, 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று சாலையோரத்தில் பலமுறை தாக்கியதால் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிழந்தார்.
தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.