
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு விளாத்துறை ஆர்சி தெருவை சேர்ந்த ரெக் ஷந்த் (25) என்பவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவியை அதே பகுதியை சேர்ந்த டைட்டஸ் (36) அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று டைட்டஸை சந்தித்த ரெக் ஷந்த், “ஏன் என் மனைவியை பற்றி தவறாக பேசுகிறாய்?” என கேள்வி எழுப்ப, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த டைட்டஸ், அருகிலிருந்த கம்பியால் ரெக் ஷந்தை தாக்கி படுகாயம் ஏற்படுத்தியதோடு, கொலை மிரட்டலும் விடுத்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. காயமடைந்த ரெக் ஷந்த், குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, டைட்டஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.