
சேலம் மாவட்டம் வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் கண்ணன். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஸ்ரீநிதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விக்னேஷ் கண்ணனும், ஸ்ரீநிதியும் வீட்டை விட்டு வெளியேறி குறிஞ்சி ஈஸ்வரன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஒரு வீடியோ வெளியிட்டனர்.
அந்த வீடியோவில் விக்னேஷ் கண்ணன் பெற்றோரை ஸ்ரீ நிதியின் உறவினர்கள் கடத்தி வைத்துள்ளதாகவும், ஸ்ரீ நிதியை விடவில்லை என்றால் விக்னேஷ் கண்ணனின் பெற்றோரை கொலை செய்து விடுவோம் என மிரட்டுவதாக கூறியுள்ளனர். அந்த வீடியோவில் பேசிய விக்னேஷ் கண்ணன், ஸ்ரீநிதியை அவர்களிடம் ஒப்படைத்தால் என் மனைவியை கொலை செய்து விடுவார்கள். விடாவிட்டால் என் பெற்றோரை கொலை செய்து விடுவார்கள்.
இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது அவர்கள் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறினர். கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்றபோது அவர்கள் மல்லூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளோம் என கூறியுள்ளனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.