பெங்களூரு நகரில் பெண் தரப்பின் போலி புகாரால் துன்புறுத்தப்படுகிறேன் என்ற காரணத்தால், ஒரு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெப்பால் பகுதியில் வசித்து வரும் சுஹெயில் அகமது என்ற இளைஞர், தனது மனைவியுடன் ஏற்பட்ட மனமுடைவு மற்றும் வழக்குப் பிரச்சனை காரணமாக, பெங்களூரு ராஜ்பவன் வாசலில் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

சம்பவத்தின் போது பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொள்ள முயன்ற அவரை அங்கிருந்த போலீசார் துரிதமாக தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சுஹெயில் அகமது மீது அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

“நான் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் என் தரப்பு நியாயத்தை போலீசார் கேட்க மறுக்கிறார்கள். நான் மன அழுத்தத்தால் சோர்ந்துவிட்டேன், என் நிலையை யாரும் புரிந்துகொள்ளவில்லை,” என சுஹெயில் தனது வேதனையை வெளியிட்டுள்ளார்.

மேலும், தனது மனைவி தவறான புகாரை பதிவு செய்து பழிவாங்க முயற்சி செய்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக நடைபெற்ற காவல்துறை நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு பக்கமாகவும், மரியாதையின்றி நடந்ததாகவும் கூறியுள்ளார்.