தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய இளமைக்கால வறுமை குறித்து பல நிகழ்ச்சிகளிலும் பேசியிருக்கிறார். அதாவது அரசியலில் இருந்து நான் விலகினால் நாளைக்கே 300 ரூபாய் கூலி கொடுத்து தோட்டத்தில் வேலை செய்து பிழைத்துக் கொள்வேன். 20 வயது வரை எங்களுடைய வீட்டில் டாய்லெட் வசதி இல்லை. எப்போது வேண்டுமானாலும் ஒரு சாதாரண கிராமத்து வாழ்க்கைக்குள் என்னால் செல்ல முடியும் என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் அவர் கையில் கட்டி இருந்த ரபேல் வாட்ச் பேசு பொருளானது.

அதற்கு விளக்கம் அளித்த அண்ணாமலை, இந்த ரபேல் வாட்ச் விமானங்களை செய்ய பயன்படுத்திய பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டது. உலகத்திலேயே 500 ரபேல் வாட்ச்கள் மட்டும் தான் செய்யப்பட்டன. அதில் ஒரு வாட்ச் நான் கட்டியுள்ளது. ஏனென்றால் நான் ஒரு தேசியவாதி. என்னைத் தவிர வேறு யாராவது இதை வாங்குவார்களா? என்று தெரிவித்தார். இதனை அடுத்து அவருடைய வாட் விலை பல லட்சம் இருக்கும் என்ற தகவல் வெளியாகி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அண்ணாமலை தன்னுடைய வாட்ச் இன் விலை பட்டியல் வெளியிட வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருந்தார். அது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவ சுமார் ஐந்து மாதங்கள் கழித்து நேற்று அண்ணாமலை அதனுடைய விலையை வெளியிட்டார். அந்த பில்லில் வாட்ச் இன் விலை ஜிஎஸ்டி யோடு சேர்த்து 3,46,530 என்று பதிவாகி இருந்தது. ஆனால் அண்ணாமலை என்னுடைய வாட்சின் உண்மையான ஓனர் கோவை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் தான். அவரை எனக்கு இரண்டு வருடங்களாக தெரியும். இந்த வாட்சை அவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளேன்.

மேலும் என்னுடைய வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள் தான் கொடுக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார். இதற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கேள்விகளும் எழும்பியுள்ளன. ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அண்ணாமலை ஒரு வாட்சை 3 லட்சத்துக்கு வாங்க வேண்டிய தேவை என்ன? வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல், பெட்ரோல் கூட போட முடியாமல் இருக்கும் ஒருவர் மூன்று லட்சத்திற்கு வாட்ச் வாங்குவாரா? என்று இணையவாசிகளும் சரி, அரசியல் கட்சிகளும் சரி வியப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றன.