
மதுரையில் தனிப்படை காவல் பிரிவில் வேலை பார்த்து வந்த மலையரசன் என்பவர் கடந்த 19ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இவருடைய மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் இறந்த நிலையில் பாதி எரிந்த நிலையில் மலையரசன் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதே பாணியில் ஏற்கனவே அந்த பகுதியில் ஒரு மூதாட்டியும் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் மூவேந்திரன் என்ற ஒரு ஆட்டோ ஓட்டுனர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அவர் போலீசாரின் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றார். இதன் காரணமாக போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதனால் அவர் அங்கேயே சுருண்டு விழுந்த நிலையில் அவரை தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர். மேலும் சமீபகாலமாக போலீசார் குற்றவாளிகளை சுட்டு பிடித்து வரும் நிலையில் இன்று காலை போலீஸ் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மதுரை போலீஸ் பிடித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது