
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 27 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு பின், இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தான் தற்போது கராச்சி கடலோரப் பகுதியில் தரையில் இருந்து இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனை இன்று மற்றும் நாளை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் பாகிஸ்தான் அரசு போர் விமானங்களை எல்லையில் நிறுத்தி வைக்க போவதாக தகவல் வெளியானதால் போர் பதற்றம் நிலவுகிறது.
இந்த அபாயகரமான சூழ்நிலையைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர் மற்றும் ரா அமைப்பின் தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் நடவடிக்கைகள், பயங்கரவாத அச்சுறுத்தல், எல்லை நிலவரம் ஆகியவை கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசு அட்டாரி-வாகா எல்லையை மூடியதோடு, விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி, உச்சகட்ட தயார் நிலை மற்றும் எல்லைப் பகுதிகளில் முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.