
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. இந்த படத்திற்குப் பிறகு லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் ஏகே 62 திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் விக்னேஷ் சிவனின் கதை திருப்திகரமானதாக இல்லாததால் அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டு தற்போது மகிழ் திருமேனியை புது இயக்குனராக கமிட் செய்துள்ளனர்.
நேற்று அஜித்தின் அலுவலகத்தில் வைத்து ஏகே 62 படத்தின் பூஜை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் ஏகே 62 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தற்போது ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார். அதில் மகிழ் திருமேனிக்கு எந்த ஒரு சமூக வலைதளத்திலும் கணக்கு இல்லை. எனவே யாரும் பொய்யான கணக்கை நம்பி ஏமாற வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதன் மூலம் மகிழ் திருமேனி தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்பது உறுதியாகி விட்டதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.