ஐபிஎல் 2025 தொடரில் பேட்டுகளின் பருமனை சோதிக்க நடுவர்கள் “பாட் கேஜ்” எனப்படும் சிறப்பு கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்வது தற்போது அதிகரித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் சுனில் நரேன் மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோரின் பேட்டுகள் இந்த சோதனையில் தவறியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் போட்டியின் போது, ரியான் பராக் பேட்டை நடுவர்கள் இருமுறை சோதித்தனர். இதைப் பார்த்த முன்னாள் இந்திய வீரரும் தற்போதைய RR பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் முகபாவனை ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, “நாங்கள் விளையாடிய காலத்தில் இப்படி பேட்டுகளைச் சோதித்திருக்க வேண்டுமே!” என நகைச்சுவையாகக் கூறினார். இவர் மேலும், “இது விளையாட்டின் ஒரு பகுதியாகவே வளர்ந்து வருகிறது. பெரிய பேட்டுகள் உருவாகும் போதும், அவற்றின் எடை அதிகரிக்காமல் இருக்கிறது என்பது பேட் தயாரிப்பாளர்களின் சிறந்த கைத்திறனை காட்டுகிறது. பேட்டின் அளவை சோதிப்பது எல்லாம் மிக விரைவாக நடக்கும், அதில் எதுவும் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை,” எனத் தெரிவித்தார். பேட்டின் அளவு குறைக்கும் திட்டம் தற்போது இருக்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் இதற்கு முன்பும் ஒரு ஐபிஎல் மேட்சின் போது அம்பையர்கள் வரிசையாக வீரர்களின் பேட்டை வாங்கி சோதனை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.