தூத்துக்குடி மாவட்டம் இடைச்சுவிளையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜான்சி பாப்பா(45) தேவதாஸ் என்பவருக்கு சொந்தமான கோழி, பன்றி பண்ணையில் வேலை பார்த்து வந்தார். அந்த பண்ணையில் தேவதாசுக்கு சொந்தமான இரண்டு எலக்ட்ரிக் பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எலக்ட்ரிக் பைக் பேட்டரிகளை சார்ஜ் போடுவதற்காக கழற்றி கோழிப்பண்ணையில் இருக்கும் இன்குபேட்டர் அறையில் வைத்துள்ளார்.

கடந்த 15ஆம் தேதி கோழிப் பண்ணைக்கு வந்த ஜான்சி பாப்பா இன்குபேட்டர் அறைக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக பேட்டரிகள் வெடித்து சிதறியது. இதனால் படுகாயமடைந்த ஜான்சி பாப்பாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து ஜான்சி பாப்பா மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்சி பாப்பா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.