கிருஷ்ணகிரி மாவட்டம் எழுவ பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் கௌரி சங்கர் ராஜா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது மூன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவர் நித்தின் மற்றொரு மாணவருடன் இணைந்து பள்ளிக்கு அருகே உள்ள விவசாய நீர் சேமிப்பு குட்டையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக நித்தின் கால் தவறி குட்டையில் விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மற்றொரு மாணவர் தலைமை ஆசிரியரிடம் சென்று விஷயத்தை கூறினார். இதனால் பதற்றமடைந்த தலைமை ஆசிரியர் நித்தினை மீட்பதற்காக குட்டையில் குதித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக மாணவரும், கௌரிசங்கர் ராஜுவும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.