வேலூர் மாவட்டத்தில் உள்ள அலமேலு மங்காபுரம் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு நந்தகுமார் நித்யஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயதுடைய யோகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளான். முன்னதாக இரண்டு குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து உடல் நலக்குறைவால் இறந்துவிட்டது. கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று நித்யஸ்ரீயும், யோகேஸ்வரனும் வீட்டில் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நித்யஸ்ரீயின் உறவினர்கள் நந்தகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். போலீசார் காயங்களுடன் இருந்த நந்தகுமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நித்யஸ்ரீயின் கழுத்தில் காயம் இருந்துள்ளது. இதனால் நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.