மத்திய பிரதேசம் மாநிலம் சட்டர்பூர் பஸ் நிலையம் அருகே நேற்று நிகழ்ந்த ஒரு சம்பவம், பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மக்கள் கூட்டம் நிரம்பிய சந்தையில் திடீரென ஒரு காளைபசு பாய்ந்து வந்து, பழங்கள் அடங்கிய தள்ளுவண்டியில் நேரடியாக பாய்ந்தது. அந்த நேரத்தில் பழம் வாங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்களும், விற்பனையாளரும் சற்றும் தாமதித்திருந்தால் படுகாயமடைந்திருப்பார்கள். சிசிடிவி காட்சியில் இந்த நிகழ்வுகள் தெளிவாக பதிவாகியுள்ளன. பழங்கள் சாலையெங்கும் சிதற, அச்சத்தில் மக்கள் அலறியடித்து ஓடிய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

சம்பவம் மிக குறுகிய நேரமே நீடித்தாலும், அதனால் ஏற்பட்ட  தாக்கம் மக்கள் மனதில் பயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காளை ஒரு நிமிடத்திற்கு தள்ளுவண்டியின்  மேல் நின்று, பின்னர் திடீரென ஓடிச் சென்றது. இதனால் யாருக்கும் பெரும் காயம் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் மாடுகள் கட்டுப்பாடின்றி சுற்றித் திரிவது வழக்கமாகி வரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் பொதுமக்கள் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகின்றன. மேலும் விலங்கு சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், நிர்வாகம் இதை எப்போது உரிய கவனத்துடன் கையாளப்போகிறது என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.