
இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டு நிறைவடைகிறது. அதனை கொண்டாடும் விதமாக அக்டோபர் 6-ஆம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி பார்வையாளர்கள் விரும்பி பார்க்கின்றனர். கடந்த செவ்வாய் கிழமையில் இந்திய விமானப்படை விமானங்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

நேற்று மூன்றாவது நாளாக இந்த சாகச நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றுள்ளது. சாகச நிகழ்ச்சியின் போது வானில் குட்டி கரணங்கள் அடித்து விமானப்படையின் ஆகாஷ் கங்கா அணி காண்போரை ரசிக்க வைத்தது. அதிலும் சூரியகிரன் ஏரோபாட்டிக் அணி விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது போல நெருக்கமாக வந்து சாகசங்களை நிகழ்த்தி காட்டி மக்களை வியக்க வைத்தது. சாரங் ஹெலிகாப்டரின் வான் நடனம் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த முடியுமா என பார்வையாளர்களை எண்ண வைத்தது.
இந்த சாகச நிகழ்ச்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக விமானங்களான தேஜஸ் இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான போரில் உபயோகப்படுத்தப்பட்ட டகோட்டா, அதிநவீன போர் விமானங்களான ரபேல் விமானம் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டது. சேட்டக் ரத ஹெலிகாப்டர்களில் 8000 அடி தூரத்தில் இருந்து வீரர்கள் பாராசூட் மூலம் குதித்தனார். அவர்கள் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி பார்வையாளர்களை குஷியாக்கினர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி பற்றி இந்திய விமானப்படை பயிற்சி அதிகாரி ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் கூறியதாவது, வருகிற ஆறாம் தேதி இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி முழு வீச்சோடு நடைபெறுகிறது. சுமார் 72 விமானங்கள் கலந்து கொள்ளும் சாகச நிகழ்ச்சி இத்தனை ஆண்டுகளாக டெல்லியில் தான் நடைபெற்றது.
ஆனால் நாட்டு மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு வருடங்களாக டெல்லிக்கு வெளியே பிரயாக்ராஜ் நகரில் நடத்தப்பட்டது. மூன்றாவது ஆண்டாக சென்னையில் நடத்தப்படுகிறது. தமிழக அரசு விமான சாகச நிகழ்ச்சியை நடத்த முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரை மிகப்பெரிய பரப்பளவு கொண்டது. இதனால் எங்களுக்கு நிகழ்ச்சியை நடத்த வசதியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்க பொதுமக்கள் ஏராளமான வருகை தர வேண்டும்.
இந்த நிகழ்ச்சியை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால் நிகழ்ச்சியை பார்க்க வரும் பொதுமக்கள் உணவு பொருட்கள் மற்றும் பட்டாசுகளை எடுத்து வர வேண்டாம். ஏனென்றால் மெரினா கடற்கரையில் இருக்கும் பறவைகள் பொதுமக்கள் கொண்டு வரும் உணவுகளை சாப்பிடுவதற்காக வரும். அது விமானங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அந்த விஷயத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
View this post on Instagram